himachal pradesh:மேக வெடிப்பில் கிராமமே காலி, தப்பியது ஒரே வீடு.. உயிர்பிழைத்தவர்கள் கூறியது என்ன?

இந்தியாவில் பருவமழை பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 365ஆக அதிகரித்து உள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 வீடு மட்டுமே எஞ்சியுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் கூறியதாவது:- புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடே உலுக்கியது. இதையடுத்து நாங்களே வெளியே வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் போய் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். என் வீடு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியது, ஆனால் மற்ற அனைத்தும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, “எனது குடும்பத்தினர், சுமார் 14 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பற்றிய செய்தி அதிகாலை 2 மணிக்கு எனக்கு கிடைத்தது. அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். எல்லாம் அழிந்துவிட்டன. என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனிடையே மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கிராமத்தில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *