
தோண்ட தோண்ட உடல்கள்! ஆப்கானிஸ்தானில் பரிதாபம்….
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4,000 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 15,000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தது. அங்குத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெராட் நகருக்கு வட மேற்கே 40 கிமீ தொலைவில் இது மையம் கொண்டிருந்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆகப் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 மற்றும் 5.5 எனப் பதிவாகியது எனத் தெரிவித்தது.

கடந்த 20 வருடங்களில் நடந்திராத மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.5 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்குப் போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரம் தீர்வதற்குள் ஆப்கானிஸ்தானில் அதிகாலையிலேயே இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.11 மணியளவில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராட் பகுதியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

