
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி நீடித்துப் பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடாது அடை மழையாய் பெய்து வருவதால் சாலைகள் தண்ணீரால் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.
விடிய விடிய மழை, காலை வரை நீடித்துப் பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மழை நீரில் வாகனங்கள் செல்ல முடியாமல் மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் காத்திருந்து மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அசோக் நகரில் மின்கம்பம் அருகில் நடந்து சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழ்ந்தார். அதே போல் தி.நகரிலும் மின்கம்பம் அருகே சென்றவர் உயிரிழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான நங்கநல்லூர், ஆதம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், மற்றும் அசோக் நகர், வளசரவாக்கம் , போன்ற பகுதிகளில் முடிச்சூர். தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்பட்டிருப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களின் அவசர உதவிக்குச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.

