அம்பை, பெருந்துறை இடைத்தேர்தல் தவெக – காங்கிரஸுக்குள் மோதல்?

தமிழகத்தில் அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், தொகுதியில் சீட்டு யாருக்கு என்பதில் கட்சிக்குள் நிலவும் குத்துப்புடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற  ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். இதேபோல் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமானார்கள்.

இதனால் இந்த தொகுதிகள் எல்லாம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தவெகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களான  மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தவெக வேட்பாளராகக் களமிறங்கி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி வாகை சூடினர்.

இதனால் மற்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், நாம் மீண்டும் களமிறக்கப்படுவோம் என்கிற கனவில்,  தவெகவில் இருக்கும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில்  திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள்  தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்,  அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், திருச்சி கிழக்கு, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தல் நடத்த முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதனால் இடைத்தேர்தல் அனுமதிக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் யார் வேட்பாளர்களாக களமிறக்கப் படுவார்கள் என்றும், நமக்கு சீட்டு  கிடைக்குமா எனக் கூட்டணிக்  கட்சிகளுக்குள் குத்துப்பிடி விவாதங்களும் எழுந்துள்ளது.

பெருந்துறை தொகுதி குறித்து முதலில் பார்ப்போம்…1957 முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவரும் பெருந்துறை தொகுதியில் அதிமுக 10 முறையும்,  6 முறை கம்யூனிஸ்ட் கட்சியும், தலா ஒருமுறை,  காங்கிரஸ்  மற்றும் சம்யுக்தா சோசலிச கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
2026 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சு.ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்ததால்தான் இந்த இடைத்தேர்தலே.

இந்த இடைத் தேர்தலிலும் தவெக தரப்பில்  சு.ஜெயக்குமாரே போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.நவம்பர் 3ஆம்தேதி பெருந்துறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஜெயக்குமாருடன் முதலமைச்சர் நெருக்கம் காட்டியதையே, அவர் போட்டியிடுவது உறுதி என அடித்துச் சொல்கிறார்கள்.

அதிமுக தரப்பில் தோப்பு வெங்கடாலம் போட்டியிடலாம் எனத்தகவல்கள் வெல்ளியாகி உள்ளது. கடந்த 2011, 2016 தேர்தல்களில் அதிமுக தரப்பில் போட்டியிட்டவர்தான் தோப்பு வெங்கடாசலம். ஒருமுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.2021 தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேட்சையாகப் போட்டியிட்டவர், தோல்வியைத் தழுவ, அதன்பின்னர் அவர் திமுகவில் இணைந்து கொண்டார். அதனால் அவருக்கு 2026 தேர்தலில் திமுக வாய்ப்பு வழங்கினாலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் மீண்டும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டியதால் அவரை திமுகவில் இருந்து கட்டம் கட்டி அனுப்பிவிட்டார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் தோப்பு வெங்கடாசலம், இணக்கமாக இருப்பதால் அவருக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள் ஈரோடு அதிமுக வட்டாரத்தில்.திமுகவில், ஒன்றிய செயலாளராக இருக்கும் கே.பி.சாமி வேட்பாளராகலாம் என்கிறார்கள். இவர் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியராவார்.

2026 தேர்தலில் கே.பி.சாமிக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்ததால் திமுக தலைமை  அவருக்கு சீட் கொடுத்தது. தற்போது அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால்  மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆதரவு பெற்ற கே. பி. சாமி என்கி பி. மோகன சுந்தரத்துக்கு ரூட் க்ளியர் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

அம்பாசமுத்திரம் தொகுதி நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்… 1952ஆம் ஆண்டு முதல் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் 7 முறை அதிமுக வென்றுள்ளது..2011, 2016, 2026 தேர்தல்களில் அதிமுக சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இசக்கி சுப்பையா, இந்த முறை எம்.எல்.ஏவான பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவன் மூலம்  இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தவெக தலைமையின் உறுதிப்படி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் இணைந்தவர்களுக்கே, இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதால், இசக்கி சுப்பையா மீண்டும் களமிறங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரம் தேர்தலின்போது திமுக கூட்டணியில்  இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்த  காங்கிரஸ்,  தற்போது தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் மீண்டும் அம்பாசமுத்திரத்தைக் குறிவைத்து காய் நகர்த்துகிறதாம்.

எப்படியாவது அம்பாசமுத்திரத்தை காங்கிரசுக்கு தருமாறு டெல்லி மூலமாகப் பேசவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.அதிமுக தரப்பில், என் கவுன்ண்டர் ஸ்பெஷலிஸ்ட்  வெள்ளத்துரையும், திமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் அல்லது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன் களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால் தவெகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று கூடி சீமானை பொது வேட்பாளராக்கம் என்னும் கருத்துகளும் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.எந்தக் கட்சியில் யார் என்பதையெல்லாம் தாண்டி தங்களின் உள்ளம் கவர் வேட்பாளருக்கு வாக்காளர்கள்  வெற்றிக் கிரீடத்தைச் சூட்டுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *