
சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சையெனத் தனது தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்து இருந்தது.
சண்டிகார்:அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்தக் கட்சி முதல் முறையாக 48 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 2வது முறையாக, அரியானா மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
இந்த நிலையில், பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று அரியானா அரசு இன்று அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, இது தொடர்பாகக் கூறுகையில்;
முதல் மந்திரியாகப் பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து, சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது. அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, அரியானா அரசு அந்தச் செலவை ஏற்கும்.” எனத் தெரிவித்தார்.

