சர்வதேச அரசியலில் அனுதினமும் ஈரான் -அமெரிக்கா குறித்தான போர் செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன..அந்த வகையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள இந்த நீண்ட நாள் நேரடி மோதல் தான் ஹார்முஸ் ஜலசந்தி.. இந்த நீரிணை பகுதியில் ஒரே நாளில் 60 ஈரான் ராணுவ நிலைகளைத் தகர்த்தெறிந்துள்ளது அமெரிக்கா.. மறுபக்கம், 18 மில்லியன் பேரல் எண்ணெயுடன் 40 பாரிய வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளது அமெரிக்கப் படை.
இந்நிலையில் , ‘எங்கள் அனுமதியின்றி அவர்களால் கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை மிரட்டி உருட்டியுள்ளார். இந்த உலகத்தையே பற்றவைக்கப் பார்க்கும் இந்த உச்சக்கட்ட மோதலின் பின்னணி என்ன? வாருங்கள், இன்றைய கள நிலவரத்தை விரிவாகப் பார்க்கலாம்!”
“கடந்த செவ்வாய்க்கிழமை… உலகமே உற்றுப் பார்த்த ஒரு நாள் அது. ஈரான் – அமெரிக்கா இடையேயான நேரடித் தாக்குதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரானின் தொடர் தாக்குதல்களையும் மீறி, அமெரிக்க ராணுவம் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 40 வணிகக் கப்பல்கள் அந்தப் பகுதியைத் தாண்டிப் போக அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்துள்ளன.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… அந்த 40 கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் எவ்வளவு எண்ணெய் இருந்தது தெரியுமா? மிரண்டு போவீர்கள்! அப்படியே 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்! சரி, இதற்காக அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே தடுத்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியிருந்த 60 ஈரான் ராணுவ நிலைகளைத் துல்லியமாகத் குறிவைத்துத் தாக்கியழித்துள்ளது. அமெரிக்காவின் வான்படை, கடற்படை மற்றும் விண்வெளி செயற்கைக்கோள் தரவுகள் (Satellite Data) என அனைத்தும் இணைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
இதன் காரணமாக, ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு, கடல் முற்றுகையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு தினமும் 20 மில்லியன் பேரல் எண்ணெய் இந்த ஹார்முஸ் வழித்தடம் மூலமாகத்தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்! எண்ணெய் ஏற்றுமதி மிகவும் கடினமாகிவிட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் தலையில் இது இடியாய் இறங்கியுள்ளது.”
“இந்தச் சூழலில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா? ‘ஈரான் இப்போது எங்கள் முழுமையான கண்காணிப்பில் உள்ளது. அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர்களால் எதையும் செய்ய முடியாது. ஏன்… எங்கள் அனுமதியின்றி அவர்களால் நகரக்கூட முடியாது; கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது’ என்று கொந்தளித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு இப்போது அமெரிக்காவின் கைகளில்தான் இருக்கிறது என்றும் அவர் அடித்துக் கூறியுள்ளார். அங்கிருந்து தினமும் மில்லியன் கணக்கில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாக அனுப்பப்படுவதாகவும், ஈரானின் டிரோன்கள் எங்கு தென்பட்டாலும் உடனடியாகச் சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹார்முஸ் கடலில் கண்ணிவெடிகளைப் (Landmines/Sea mines) பதிப்பதற்காக ஈரான் தயாரித்து வந்த ஒரு பிரம்மாண்ட ராக்கெட்டை, அது முடிவடையும் தருவாயில் அமெரிக்கப் படைகள் கண்டுபிடித்துத் தகர்த்தெறிந்துள்ளன. இந்த வாரத் தாக்குதல்களில் ஈரானில் குறைப்பட்டபட்சம் 18 பேர் உயிரிழந்துள்ளனர், 108 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் குஹெஸ்டாக் நகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி மீதும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? அதற்குப் பதிலடியாகக் குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகிறது. பஹ்ரைன் வான்பரப்பில் பறந்த ஈரான் ஏவுகணைகளைத் தங்களது ஏவுகணைத் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்துள்ளதாகப் பஹ்ரைன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.”
“இந்த மோதலுக்கெல்லாம் வித்திட்டது எது தெரியுமா? கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் இருந்த ஈரான் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியதுதான். ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி அமெரிக்கா முந்திக்கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான், அந்த வழியே செல்லும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கத் தொடங்கியது.
இப்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் கோரத் தாண்டவமாடுகிறது.இதனிடையே, ஈரானின் இந்த அதிரடிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரான் நிலைகள் மீது வரும் நாட்களில் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹார்முஸ் ஜலசந்திக்குத் தங்களின் சொந்தத்தைக் கொண்டாடும் விதமாக, அதன் பெயரையே மாற்றும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள, ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அடித்தளத்தையே ஆட்டிப்படைக்கும் அளவுக்குப் புதிய உத்திகளைக் கையாளப் போவதாக அவர் கூறியுள்ளார்.ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது உருவாகியுள்ள இந்த நெருக்கடி, வெறும் ஈரான் – அமெரிக்கா இடையேயான பிரச்சனை மட்டுமல்ல… உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், எண்ணெய் விநியோகத்தையும் நேரடியாப் பாதிக்கக்கூடிய ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வரும் நாட்களில் இந்தப் பதற்றம் மேலும் அதிகரிக்குமா அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழி பிறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது போன்ற உலக நடப்புத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள். நன்றி, வணக்கம்!”


