
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள இருந்த ஜிம் மாஸ்டர் பலி!
சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ஜிம் டிரெய்னர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். Gym trainer
சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் ஜிம்மில் டிரெய்னராகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காகக் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தீவிர உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். அப்போது, திடீரென உடல் சோர்வுடன் காணப்பட்டதால், ஜிம்மில் உள்ள குளியறைக்கு சென்றுள்ளார். அங்குச் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியில் வராததால், அங்குள்ளவர்கள் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


