
தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் சுட்டுக் பிடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த ரவுடி தணிகாச்சலம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையபகுதியைச் சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம், இவர்மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த ரவுடி தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் பதுங்கி இருந்த அவரைப் போலீசார் நேற்று இரவுக் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் சென்றபோது, ரவுடி தணிகா போலீசார் பிடியிலிருந்து தப்பிக்க காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ரவுடி தனிகாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.இதில் வலது கை, வலது கால் ஆகிய பகுதியில் குண்டுகள் பாய்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

