
பத்துக்கு பத்து வீடு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையென வாழ்ந்தாலும், தனது சாதனைமூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கேரம் நாயகி காசிமா. வெற்றிக்கு வறுமை தடை அல்ல என நிரூபித்துள்ள காசிமாவின் வெற்றிப் பயணம்குறித்து பார்க்கலாம்.
பத்துக்கு பத்து வாடகை வீட்டில்தான் பதக்கங்களும், கோப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. வெற்றிக்கு வறுமை ஒரு தடையே இல்லையென நிரூபித்துள்ளார் கேரம் நாயகி காசிமா.
வடசென்னைக்காரர்களின் ரத்தத்தில் ஊறிப்போன கேரமுக்கு புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாட்ஷா மட்டும் விதிவிலக்கா என்ன? கேரம் மீது தீராத காதல் கொண்ட பாட்ஷா, 90களிலேயே உலக சாம்பியன் பட்டம் வென்ற மரிய இருதயத்தைப் போல் தனது மகனை எப்படியாவது பெரிய கேரம் வீரராக்க நினைத்தார். கொரோனா கொடுந்துயரம் அதற்குப் பிரேக் போட்ட நிலையில், நான் இருக்கிறேன் என வந்து நின்றார் மகள் காசிமா. வறுமைக்கும், பள்ளிப்படிப்புக்கும் இடையே 7 வயதில் தொடங்கிய காசிமாவின் பயணம் இன்று உலக சாம்பியனாக முத்தாய்ப்பு பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற காசிமா, தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு என ஒரே நேரத்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில்தான் கேரமும் கொண்டாடப்படுமா என நியூஸ்18 தமிழ்நாடு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது.


