உலகில் 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள யூபிஐ செயலி..பிரதமர் மோடி பெருமிதம்.!

மும்பையில் உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழாவைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் 11 நாடுகளில் இந்தியாவின் யூபிஐ செயலி பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மும்பையில் உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா நடைபெறுகிறது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். அவருக்கு நிதித் தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா பேசினார். அப்போது, கடந்த பத்தாண்டுகளில் நிதித் தொழில்நுட்பம் இந்திய நிதித்துறைக் கட்டமைப்பை மறுவடிவமைத்துள்ளதாகக் கூறினார். வங்கிக் கிளைக்குச் சென்று செய்யும் நடவடிக்கையை ஒவ்வொரு குடிமகனின் கைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறினார்.

பெருநகரங்கள் முதல் சிற்றூர் வரை, கடைக்காரர் முதல் உழவர் வரை அனைவரும் பணப் பரிமாற்றம், சேமிப்பு, கடன்வாங்கல் அனைத்தையும் தடையின்றி டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதாகக் கூறினார். மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 2400 கோடி ரூபாய்க்குமேல் யுபிஐ மூலம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார்.

இந்தத் தாக்கத்தால்தான் இதுபற்றிக் குறிப்பிட்ட பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இது ஒரு பண்பாட்டின் கதை என்று கூறியதாகத் தெரிவித்தார். இன்று உலகின் 11 நாடுகளில் யுபிஐ செயலி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறினார். உலகில் எங்கெல்லாம் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ, எங்கெல்லாம் இந்தியா பெருமளவில் வணிகம் செய்கிறதோ, எந்த நாடு இந்தியாவுடன் இணைந்து செல்லத் தயாராக உள்ளதோ அவர்களை எல்லாம் இணைத்துக்கொண்டு செயல்படத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *