ஆம் ஆத்மியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் !

புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி அமைச்சர் பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட், இன்று பாஜகவில் இணைந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் எம்.எல் கட்டார் மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா முன்னிலையில் கைலாஷ் கெலாட் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

டெல்லி அமைச்சரவையில் உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தன்வசம் வைத்திருந்த கைலாஷ் கெலாட் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்.

கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில், “ஆம் ஆத்மி மிக மோசமான உட்கட்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் கட்சி முன்வைத்த பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. யமுனை ஆற்றைத் தூய்மைப் படுத்துவேன் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி அதற்கு ஒரு சாட்சி. இப்போது யமுனை ஆறு முன்பைவிட மிக மோசமாக மாசமடைந்துள்ளது.

இதேபோல் கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. கேஜ்ரிவாலின் பங்களா சர்ச்சை உள்பட பல்வேறு சர்ச்சைகள் மக்கள் மத்தியில் ‘இனியும் ஆம் ஆத்மியை நம்பலாமா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் போட்டிப் போட்டுக் கொண்டே இருப்பதில் ஆம் ஆத்மி செலவழித்துக் கொண்டிருந்தால் டெல்லி உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது என்பதே உண்மை. இதனால் மக்களுக்கு அடிப்படை சேவைகளைக் கூடச் செய்ய முடியாமல் போகிறது.

நான் எனது அரசியல் பயணத்தை மக்கள் சேவை என்ற இலக்கோடு தொடங்கினேன். அதையே தொடர விரும்புகிறேன். அதனால் இப்போது ஆம் ஆத்மியிலிருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அதனால் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். உங்கள் உடல் நலம் சிறக்க, எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கைலாஷ் கெலாட் முதல்வராகலாமெனப் பேச்சு அடிபட்டது. ஆனால் அதிஷி டெல்லி முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கைலாஷ் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரவையில் கட்சி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய மூன்றாவது நபர் கைலாஷ் கெலாட் ஆவார். ஏப்ரலில், சமூக நலன் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ் குமார் ஆனந்த், கட்சியிலிருந்து விலகிப் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2022 நவம்பரில் கட்சி மற்றும் அமைச்சரவையிலிருந்து ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *