
தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 10க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று முன்தினம் இரவு லிங்கதீரனப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தன.
அங்கு விவசாயிகள் சந்திரன் மற்றும் சாந்தம்மா ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி, ரவி என்பவர் ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்த வெள்ளரி, சரத் என்பவரின் தோட்டத்தில் வாழை மரங்களை யானைகள் நாசம் செய்து விட்டு சென்றன. நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள், யானைகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி மற்றும் வெள்ளரிக்காய்களை யானைகள் சேதப்படுத்தியதால் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், வனசரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர், திம்மசுந்தரம் வனப்பகுதியில் முகமிட்டுள்ள, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது வரத்து குறைவால், சந்தைகளில் தக்காளி விலை கிலோ ₹100 முதல் ₹140 வரை விற்கப்படுகிறது. யானைகளால் சேதமான தக்காளி, வெள்ளரி மற்றும் வாழை ஆகியவற்றின் மதிப்பு சுமார் ₹10 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி மற்றும் நிர்வாகிகள், நேற்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். வனத்துறை மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, விளை நிலத்தில் முட்டி போட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.



