
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாகத், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதிவரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு முழுவதும் பல பகுதிகளில் கனமழை கொட்டியது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றாலும் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் மழையானது விமான பயணத்தையும் தாமதப்படுத்தி உள்ளது. சென்னையிலிருந்து புதுடில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 45 நிமிடங்கள்வரை தாமதமாக இயக்கப்படுகிறது.
ஹைதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் 30 நிமிடங்கள்வரை தாமதமாகச் செல்கிறது. கனமழை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
