Farmers Protest: 177 சமூக ஊடக கணக்குகள் முடக்கம்!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாகப் பதிவிட்ட 177 சமூக ஊடக கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது.பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி: 4வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளைப் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகளுக்கான சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்,

விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண உயர்வு மற்றும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் கடந்த 13ம் தேதி டெல்லி நோக்கிப் பேரணி புறப்பட்டனர்.

கடந்த 2020ம் ஆண்டைப் போல மீண்டும் டெல்லியில் பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் மாநில எல்லையிலேயே விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால், பஞ்சாப், அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்தனர்.

அதே சமயம் விவசாயிகளைச் சமாதானப்படுத்த கடந்த 8, 12, 15ம் தேதிகளில் 3 கட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் குழுப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 4வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நாளை(பிப்.,21) டில்லி நோக்கிப் பேரணி துவக்க உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகப் பதிவிட்ட 42 எக்ஸ் சமூகவலைதள கணக்குகள், 35 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 14 இன்ஸ்டாகிராம் கணக்குகள் உட்பட 177 சமூக ஊடக கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *