
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
குறிப்பாக அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை சூழல் கெடுவதோடு, வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக்கூறி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தித் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்காக விவசாயிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திப்பதற்காக விவசாயிகள் 7 பேர் டெல்லி சென்றனர்.
விவசாயிகள் 7 பேர், பா.ஜ.க.வினர் 4 பேர் என மொத்தம் 11 பேர் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
