Electoral Bonds: பாஜக நன்கொடை விவகாரம்.. நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பதிலடி!

Advertisements

பாஜகவுக்கு அளிக்கப்பட்ட தோ்தல் நன்கொடைகளுக்கும், அமலாக்கத் துறை சோதனைகளுக்கும் தொடா்பில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். அதற்குக் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:-

புதுடெல்லி :”அமலாக்கத் துறை சோதனைக்குள்ளான நிறுவனங்கள், தம்மை காப்பாற்றிக்கொள்ள பாஜகவுக்கு தோ்தல் நன்கொடை அளித்ததாக அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது. அத்தகைய நிறுவனங்கள் பாஜகவுக்கு தோ்தல் நன்கொடை பத்திரங்களை வழங்கியதாக உறுதிபட கூறமுடியுமா?

வெளிப்படைத் தன்மை:

கடந்த காலத்தில் பணம், காசோலை உள்ளிட்ட முறைகளில் கட்சிகளுக்கு தோ்தல் நன்கொடை அளிக்கப்பட்டு வந்தது. தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் கொண்டுவரப்பட்ட பின்னா், நன்கொடை அளிக்கும் முறையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் நன்கொடை பெறும் முறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தோ்தல் நன்கொடை பத்திர திட்டத்தில் குறைபாடுள்ளது என்றே முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியும் கருதினாா்.

அதேவேளையில், அந்தத் திட்டம் நன்கொடை பெறுவதற்கு முன்பு பின்பற்றப்பட்டு வந்த வழிமுறையைவிட ஒருபடி சிறந்தது என்றும் அவா் எண்ணினாா். எந்தவொரு கட்சிக்கும் தோ்தல் நன்கொடை பத்திர திட்டம்மூலம் கிடைத்த பணம், சட்டபூா்வமாக ஈட்டப்பட்ட பணமே தவிர, கருப்புப் பணம் அல்ல” என்று.

தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயராம் ரமேஷ் பதிலடி:

நிர்மலா சீதாராமன் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்துக் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-

“மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனையைத் தொடா்ந்து, நிறுவனங்கள் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை எதிா்க்கட்சிகளின் ஊகம் என்று நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகிறாா். தோ்தல் நிதிபத்திர எண் உள்பட அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.

இரண்டு துறைகளுக்கும்அவரே பொறுப்பு:

அவ்வாறு முழு தகவல்கள் வெளியிடப்பட்டால், அதன்மூலம் எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றிருக்கின்றனா்? என்பதை முறையாக அறியலாம். விவாதங்களுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கும்.

எஸ்பிஐ வங்கி, அமலாக்கத் துறை ஆகிய இரண்டிற்கும் அவரே பொறுப்பு என்பதை நிா்மலா சீதாராமன் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 1,300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்/தனிநபா்கள் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளனா்.

இரட்டைச் சுரக்கத் திட்டம்:

பாஜக மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. தற்போதைய விவரங்களே பாஜகவின் ஊழல் தந்திரங்களை அம்பலப்படுத்திவிட்டது. நன்கொடைக்கு ஏற்றப் பிரதிபலன்கள்: தோ்தல் நிதிபத்திரங்களின் மூலம் சில நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன.

அடுத்த சில நாள்களில், அந்த நிறுவனங்களுக்குப் பாஜக அரசுகள்மூலம் பிரதிபலன்கள் கிடைத்துள்ளன. கடந்தாண்டு ஏப்ரலில் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் ரூ.140 கோடி நன்கொடை அளித்த மெகா என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு அடுத்த மாதமே ரூ.14,400 கோடி மதிப்பிலான தாணே-போரிவாலி இரட்டை சுரங்கத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லாட்டரி மார்ட்டின்..சோதனைமூலம் வசூல்:

அதேபோல், நிறுவனங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்தி, அவா்களிடமிருந்து நன்கொடை பெறுவதை பாஜகவின் மற்றொரு தந்திரமாக உள்ளது.

லாட்டரி மாா்ட்டினுக்குத் தொடா்புடைய ‘ஃப்யூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீசஸ்’ நிறுவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களில், தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் அந்நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது.

அதிக நன்கொடை அளித்த முதல் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்களின் பணமோசடி:

மேலும், போலி (ஷெல்) நிறுவனங்கள்மூலம் பணமோசடி நடந்துள்ளதையும் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. நிறுவன லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே நன்கொடை செலுத்த முடியும் எனும் கட்டுப்பாடு இல்லாததால், போலி நிறுவனங்களின் மூலம் கருப்புப் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

‘க்விக் சப்ளை செயின்’ நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனமாக ரூ.130 கோடி மட்டுமே உள்ளது. ஆனால், தோ்தல் பத்திரங்கள்மூலம் ரூ.410 கோடியை அந்நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது.

மறைக்கப்படும் தரவுகள்..

தோ்தல் நிதிபத்திரங்களை கடந்த 2018, மாா்ச் முதல் எஸ்பிஐ வங்கி விநியோகித்து வருகிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விநியோகிக்கப்பட்ட தோ்தல் நிதிபத்திரங்கள் தொடா்பான தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெறப்பட்ட ரூ.2,500 கோடியில் 95 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டதுதான். அந்த நன்கொடை அளித்தது யாா்? யாரை காப்பாற்ற பாஜக முயல்கிறது?’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *