அதிமுக மீது அவதூறு பரப்பும் திமுக – எடப்பாடி பழனிசாமி!

Advertisements

சென்னை:

Advertisements

 அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், அதிமுக பற்றி அநாகரீகமான பொய்யைக் கூறியுள்ள திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரைக் கண்டித்தும், அதிமுக மகளிர் அணியின் சார்பில், நாளைச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் திமுக அரசு பதவியேற்ற கடந்த 44 மாத காலத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள்; பாலியல் சீண்டல்கள்; கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்கெட்டுள்ளது.

இதன் உச்சமாக, தமிழ் நாட்டின் தலைநகரில் மிகுந்த பாதுகாப்புக்குரியதாகக் கருதப்படும் உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே, பல்கலைக் கழக மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், முறையாகப் பாதுகாப்பு வழங்குவதில் தொடங்கி, கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பது வரை அரசு நிர்வாகம் முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள `சார்’ என்ற அந்த ஒரு நபர் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றபோது, அதற்கு முறையான பதில் அளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதற்றமடைந்து, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன்மூலம், இவர்கள் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் அமைச்சர் ஒருவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறு செய்திகளைப் பரப்பி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் திசை திருப்பப் பார்க்கிறார்.

எப்ஐஆரை கசியவிட்டது மற்றும் முறையாக விசாரணை நடத்தாதது குறித்து, ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தமிழ் நாடு அரசுக்குத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் கூட இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்ய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அக்கறை காட்டவில்லை.

`யார் அந்த சார்?’ என்கிற கேள்வி, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் எழுப்புகின்ற கேள்வி அல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ் நாட்டு மக்களே எழுப்புகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தவிர்ப்பதன் மூலம் முதல்வர் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது என்கிற பொறுப்பிலிருந்து விலகி இருக்கிறார்.

எனவே, திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தி, களம் கண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற காரணத்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்ற ஞானசேகரன் என்கிற நபர், ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்களுடனும், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக-வினருடனும் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்ற சூழலில், குற்றவாளிக்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அம்பலப்பட்டுப் போயிருக்கின்ற நிலையில், இதுகுறித்து முதல்வர் எந்த வித விளக்கமும் கொடுக்காமல் தவிர்ப்பதேன்?

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும்; பெண்களுக்கு எதிராகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியாத் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும்; `பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என அநாகரீகமான, அருவருக்கத் தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யைக் கூறியுள்ள விடியாத் திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், ஜனவரி 11ம் தேதி நாளைச் சனிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி கோகுல இந்திரா அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் கழகச் செயலாளர்கள், மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், கழக மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக மகளிர் அணியினரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *