Tasmac :ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கு : அமலாக்கத்துறை விசாரிக்கத் தடை!

Advertisements

டாஸ்மாக் ஊழல் வழக்கை அமலாக்கத்துறை விசாரிப்பதற்குத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிறுவனமான டாஸ்மாக் தலைமையகம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கும் நிறுவனங்களிலும் மார்ச் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மதுபானக் கொள்முதல், மதுபானங்களை ஆலைகளில் இருந்து கிடங்குகளுக்கும் கடைகளுக்கும் எடுத்துச் செல்லும் வாகன ஒப்பந்தம், மது குடிப்பக உரிமை வழங்குதல் ஆகியவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை  அறிக்கை வெளியிட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனக் கூறிவிட்டது.
இதையடுத்துச் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர். டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பூசண் ராமகிருஷ்ண கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 2014- 2021 காலக்கட்டத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து மாநில இலஞ்ச ஒழிப்புத் துறை 41 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். 2025 மார்ச்சில் டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனையிட்ட அமலாக்கத் துறையினர், அதிகாரிகளின் செல்போன்கள், மடிக்கணினி, பெண்டிரைவ், சிடிக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் தனிப்பட்டவர்கள் செய்த குற்றத்துக்காகத் தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது கூட்டாட்சி அமைப்பின் ஆளுமையில் தலையிடுவதாகும் என்று கூறி வாதிட்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், தனி ஆட்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எனக் கேள்வி எழுப்பியதுடன், அமலாக்கத்துறை வரம்புமீறி நடப்பதாகக் கூறிக் கண்டனம் தெரிவித்தனர். முறைகேடு நடந்தால் தனிப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தலாம் என்றும் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தை எப்படி விசாரிக்க முயலலாம் என வினவினர்.
அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் தாண்டிச் செயல்பட்டுள்ளதாகவும், கூட்டாட்சி ஆளுமையில் தலையிட்டுள்ளதாகவும் கூறினர்.
டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரிக்கத் தடை விதித்ததுடன், டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டுக்குப் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கைக் கோடைவிடுமுறைக்குப் பின் விசாரிப்பதாகக் கூறித் தள்ளி வைத்தனர்.

இதனிடையே டாஸ்மாக் ஊழல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் மாநில அரசு அறிக்கை தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத் தலைமையகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக அறிவித்தது.
டாஸ்மாக் வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிப் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், இலட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ” சிபிஐ., விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு வரும் வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் எதையும் முடித்து வைக்க மாட்டோம் என்று தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவாதம் அளிக்குமா? என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘உள்துறைச் செயலாளரிடம் வழக்கு எதையும் முடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன்’ என்று கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு மீதான விசாரணையை அடுத்த 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *