வேலியே பயிரை மேய்ந்த கதையாக, 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடத்திலேயே அரங்கேறியுள்ள உவ்வே விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
நவம்பர் 8-ஆம் தேதி பிற்பகல் சுமார் 2:50 மணி… செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் அகாடமியின் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தன் அறையில் இருந்து, அழுதபடி ஓடியிருக்கிறான் அந்த 16 வயது வடமாநில சிறுவன்…
அங்கிருந்த காவலர் என்ன ஏதென்று விசாரிக்கை சைகையில் ஏதேதோ கூறி விட்டு விறுவிருவென ஓடிவிட்டான்.
இந்தத் தகவல் அரசல் புரசலாகப் பரவ, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்ட மற்றும் நன்னடத்தை அலுவலர் ஜே. வாஹினி, அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்தினார்.
அப்போதுதான், அந்தச் சிறுவனிடம் டி.எஸ்.பி. வசந்தன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுவன், தமிழ்நாடு காவல் அகாதடமியில் உள்ள அதிகாரிகளுக்கான உணவகத்தில் (GO Mess) கடந்த இரண்டு மாதங்களாக உணவு பரிமாறும் பணியாளராக வேலை செய்து வந்துள்ளான்.
இந்த அகாடமியில், காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் டிஎஸ்பி வசந்தன் அவ்வப்போது உணவகத்திற்கு ஆய்வுக்கும் வந்தபோது, வசந்தனுடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டதுஇந்த நிலையில்தான் சம்பவத்தன்று, அரவிந்தராஜ் என்ற காவலர், அந்தச் சிறுவனிடம் அமராவதி பிளாக்கில் உள்ள 23-ஆம் எண் அறைக்குச் சென்று, அங்குள்ள காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தனிடம் உணவை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
அப்படி உணவு கொடுக்க வந்த சிறுவனை, உணவை மேஜையின் மீது வைப்பதற்குப் பதிலாக படுக்கையின் மீது வைக்குமாறும், மேலும் ஐந்து நிமிடங்கள் அங்கேயே இருக்குமாறும் மதுபோதையில் இருந்த டி.எஸ்.பி. வசந்தன் கூறியுள்ளார். ஆனால் சிறுவன் வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேற முயன்றபோது, டி.எஸ்.பி வசந்தன் அவனைத் தடுத்து, அவனிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுவன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து இந்தி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சிறுவனின் புகாரைத் தயார் செய்த செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்ட மற்றும் நன்னடத்தை அலுவலர் ஜே. வாஹினி, நவம்பர் 20ஆம் தேதி கிளாம்பாக்கம் காவல்நிலையத்டில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டப்பிரிவில் டிஎஸ்பி வசந்தன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், தாம்பரம் ஆணையரக துணை ஆணையர் கார்த்திகேயன், குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஎஸ்பியிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து புகார் உண்மையென தெரியவந்ததால், டி.எஸ்.பி. வசந்தன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேலியாக இருக்க வேண்டிய காவல்துறையில், உயர் பதவியில் இருக்கும் ஒருவரே, வேலி தாண்டிய வெள்ளாடாய், சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி அவப்பெயரை பெற்றுத்தந்திருக்கிறது.
தற்போது காவலர் பயிற்சி மையத்தில் இதுபோல் வேறு ஏதேனும் அத்துமீறல்கள் நடந்துள்ளதா எனவும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை மீறி அந்த சிறுவன் எப்படி உணவுக்கூடத்தில் எப்படி பணியமர்த்தப்பட்டான் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.


