மகள எங்கேயோ அடச்சி வச்சிருக்காரு.. அமைச்சர் வெங்கடரமணன் இப்படியா.?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலப் பொருளாளரும், தமிழக அரசின் அமைச்சருமான பி.வெங்கடரமணன் மீது அவரது மனைவி வீசியிருக்கும் குற்றச்சாட்டு குண்டுகள் பகீரைக் கிளப்பியிருப்பது  குறித்து விவரிக்கிறது, ஜெம் தொலைக்காட்சியின் இந்த செய்தித் தொகுப்பு…

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்து வருபவர் பி.வெங்கடரமணன். கடந்த 2000-ஆம் ஆண்டு முதலே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேலாளராகவும், நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் நீண்டகாலம் பணியாற்றி வந்த பி.வெங்கடரமணன், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்துதான்,  சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு, எம்.எல்.ஏவாக வென்று அமைச்சராகி இருக்கிறார்.

சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த வெங்கடரமணன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் மற்றும் முதுகலை சட்டப்படிப்பு, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பு, பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இப்படிப் படித்தவராகவும் பண்பட்டவராகவும் அறீயப்பட்ட  அமைச்சர் வெங்கடரமணன் மீதுதான், குடும்ப வன்முறையில் ஈடுபட்டார், குழந்தையைப் பிரித்து வைத்துள்ளார், கொலை மிரட்டல்  விடுக்கிறார் என அவரது மனைவி மீனாட்சி குற்றச்சாட்டு குண்டுகளை வீசியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம், அதாவது தேர்தலுக்கு முன்பாக, மீனாட்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், வெங்கடரமணனுக்கும் தனக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 2016-ம் ஆண்டு யோகவர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கணவருடன்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் எங்களை சேர்ந்து வாழ உத்தரவு பிறப்பித்தும், எனது கணவர் தற்சமயம் என்னுடன் வாழாமல் எனது 9 வயது குழந்தையை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டார், எனது குழந்தையை கணவர் வெங்கடரமணனிடமிருந்து மீட்டுதரவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

காவல் துறை இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அமைச்சர் வெங்கடரமணன் மீது அவர்து மனைவி மீனாட்சி சென்னை சைதாப்பேட்டை 17-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் ஜீவனாம்சமும், நஷ்ட ஈடாக 75 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியுளார். இந்த வழக்கு விசாரணைக்கு அமைச்சர் வெங்கடரமணன் ஆஜராகாத நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி, மாசமா இருந்தபோது அபார்ஷன் பன்ணிட்டு வான்னு அடிச்சி தொராத்துனாரு… என்ன கூப்பிடுறேன் கூப்பிடுறேன்னு சொன்னாரு… கூப்பிடல…என் மகள பார்கக் விடமாட்டேங்குராரு… என் மகள் எங்கே இருக்கான்னு தெரியல, வீட்டு வாசலுக்குப் போனா என்னையும் என் அம்மாவையும் கொலை செஞ்சிடுரதா மிரட்டுராரு… ஆனா அவர் வீடு எங்கே இருக்குன்னு தெரியல… என கதறியுள்ளார்.தவெக அமைச்சரையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவிடம் இருந்து பிரிந்து செல்வதாக அவரது மனைவி அண்மையில் தெரிவித்திருந்தார்.

தவெக எம்.எல்.ஏவோ பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைதாகியுளார். துணை சபாநாயகர் ரவிசங்கர், கார்த்திக் என்பவரைத் தாக்கியதுக் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் வெங்கடரமணன் மீது அவரது மனைவி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.தொடர்ந்து தவெக மீது எழும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அதன் தலைவர்  முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தீரா தலைவலியையே ஏற்படுத்தியிருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *