Chennai:மெரினா நோக்கிப் படையெடுக்கும் மக்கள் :ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Advertisements

விமானங்களின் சாகச நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.

சென்னை:இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டுத் தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ,தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் இந்தச் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்காக மட்டும் பிரத்தியேகமாகப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி பார்வையாளர்கள் நின்றபடியேதான் சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க முடியும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையென 2 மணி நேரம் இந்தச் சாகச நிகழ்ச்சி நடக்கிறது.

சாகச நிகழ்ச்சியைப் பார்க்கவரும் பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையையொட்டி 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அதற்கான ஏற்பாடுகளைப் போலீசார் செய்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காகச் சுமார் 8 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சாகச நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மாநகர பஸ்களுடன், கூடுதலாகச் சிறப்பு பஸ்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ஆர்வமுடன் பொதுமக்கள் மெரினாவுக்கு வருகை தந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இந்தநிலையில் மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காண வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வேளச்சேரி ரெயில் நிலையத்தில் எங்கும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. வேளச்சேரி முதல் சென்னை கடற்கரைவரை பயணிகள் வசதிக்காகக் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *