dr subbiah murder case:தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் விடுதலை!

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரைச் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிலப் பிரச்சினை தொடர்பாகச் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களைச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாகத் தங்களின் வாதங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லையென வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாகக் கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும்’என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ளது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *