சென்னை:
“அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தபோது எனக்குக் கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை அணிகிறார்களே நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று, ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “விடியல் எங்கேயென எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள்.
விடியல் தரப்போகிறோம் எனச் சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்குக் கண்கள் கூசத்தான் செய்யும்.
ரவுடிகளின் மீது தயவு தாச்சனம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் பாதுகாப்பு மிக்க மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.
பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை காதல் விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சினை தனிப்பட்ட முன்விரோதம் வாய் தகராறு போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளது. அரசியல் காரணங்கள் சாதிய, மதக் கொலைகள் முலையிலேயே கிள்ளி, குறைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தபோது எனக்குக் கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை அணிகிறார்களே நினைத்தேன். பேரிடர் நிதியைக் கூடத் தராமல் உள்ள மத்திய அரசைக் கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன்.
ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கேன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்குக் கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை.” எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கடுமையாக எதிரொலித்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்ததுடன், யார் அந்த சார் என்றே பேட்சையும் அணிந்திருந்தனர். யார் அந்த சார் என்று கோஷமும் எழுப்பினர்.