மதுரை:
மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆணையர் சஞ்சய் ராய், முதன்மை ஆணையர் வசந்தனர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது,
எனது தாய் முருகனை வேண்டிக் கொண்டு வடிவேலு என எனக்குப் பெயர் வைத்தார்கள். ஆனால் நாராயணன் என எனது பெயரை உறவினர்கள் மாற்றினர். அப்போதிருந்து உடல்நிலை சரி இல்லாமல் போக எனது தாய் வடிவேலு என்ற பெயரே இருக்கட்டும் எனக் கூறினார். அவரால் தான் தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்களோடு சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன். அந்த ஆசை இங்கேயே நிறைவேறி விட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கப் போவேன். முன்பெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் மாட்டை அவிழ்த்து விடுவார்கள்.
மாடு எங்க வருதுன்னு தெரியாது. பின்னால வந்து குத்திட்டு போயிரும். ஆனால் தற்போது கட்டுப்பாட்டோடு மாட்டை அவிழ்த்து விடுகிறார்கள்.
பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டும். அடுத்தடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சுந்தர் சி யின் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு மாரிசன் படத்திலும் நடித்து வருகிறேன். பிரபு தேவாவும், நானும் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளோம்.
வருமான வரித்துறை இருக்கிறவங்ககிட்ட வரியை அதிகமாகப் போட்டு வாங்கிகோங்க… ஏழைகளுக்கு வரியைப் பார்த்துப் போடுங்கள்… விஜய் அரசியல், அஜித் கார் ரேஸ் குறித்து பேச விரும்பவில்லை.
மாமன்னன் படத்தில் வருவது போல் வாழ்க்கையில் அதிகளவு கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் தான் தற்போது காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறேன்.