Advertisements

வெனிசுலா அரசு அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது. இதையடுத்து, வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, வெனிசுலா அரசு அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், சிறைபிடிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த எச்சரிக்கையடுத்து இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, வெனிசுலா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Advertisements




