திமுக கூட்டணி வலுவாக உருவாகிய நிலையில் மீண்டும் பிளவு..! காரணம் என்ன.?

Advertisements

2025 ஏப்ரல் 10ம் தேதி பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உருவானது. அதிலிருந்து டிசம்பர் வரை இக் கூட்டணியை சீந்துவார் யாரும் இல்லை. அது வரை திமுக கூட்டணிதான் வலுவாக இருந்தது.. 2026 சட்டமன்றத் தேர்தலில் இக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற நிலையிருந்தது. ஆனால் 2026 ஜனவரியில் அன்புமணியின் பாமக அதிமுகவோடு கூட்டணி அமைத்தது.

அதன் பின்னர் டிடிவி வந்தார். இப்படியாக அதிமுக கூட்டணி வலுபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியில் மெல்ல மெல்ல விரிசல் உண்டாக ஆரம்பித்தது. அதிலு குறிப்பாக காங்கிரஸ், விசிக, ராமதாஸ் போன்ற வகையால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட தொடங்கியது.

இதில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படவில்லை., இந்த நிலையில் அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சீட் விசயத்தில் கறார் காட்டும் மூடில் இருப்பதால் அறிவாலயம் தரப்பு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

தி.மு.க கூட்டணயில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடனே இந்த முறையும் தேர்தலை சந்திக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது. அதனால் சீட் விசயத்தில் பெரிய மாற்றம் இருக்காது என நினைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க தரப்பு பேச்சுவார்த்தை நடத்த துவங்கியதும், நிலைமை மாறியது.

தங்களுக்கு கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என வரிசையாக கோரிக்கைகளை வைக்க துவங்கியது காங்கிரஸ். சரி, காங்கிரஸ் கட்சியை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க திட்டமிட்ட நிலையில் அந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட ம.ம.க இந்த முறை ஐந்து சீட்டை எதிர்பார்ப்பதாக சொல்லியது. மற்றொருபுறம், மார்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை தங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்க துவங்கியது.

இவர்களை சரிகட்டவே தி.மு.க யோசித்துவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சயின் தலைவர் திருமாவளவனும் தன் பங்கிற்கு இப்போது தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். திருமாவின் கோரிக்கையை தி.மு.க-வும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் வி.சி.கவினர்.

கூட்டணி விசயத்தில் திருமா என்ன நினைக்கிறார் என்று வி.சி.கவினரிடம் பேசிய போது, நாங்கள் தி.மு.க கூட்டணியில் 2019-ம் ஆண்டு தேர்தல் முதல் இப்போதுவரை தொடரந்து கொண்டுள்ளோம். தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் இப்போது வி.சி.க வளர்ந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆறு இடங்களில் வாய்ப்பு வழங்கியது தி.மு.க. நான்கு இடங்களில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்.

இந்த முறை கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால்,தி.மு.க தரப்பிலிருந்து எங்களை ஏற்கனவே தொடர்பு கொண்டவர்கள் ஆறு தொகுதியை அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதை ஏற்பதா என்கிற குழப்பம் இருந்து வந்த நிலையில், ராமதாசை கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.கவின் சில நிர்வாகிகள் காய் நகர்த்தி வந்தனர்.

இது குறித்து தி.மு.க தரப்பிலிருந்து கேட்டபோது, நாங்கள் பா.ம.க, பா.ஜ.க உள்ள அணியில் இருக்கமாட்டோம் என்கிற முடிவை தெளிவாக சொல்லிட்டோம். இருந்தாலும் ராமதாஸ் தரப்பு மீது இப்போதும் தி.மு.கவுக்கு ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. அதுதான் எங்கள் தலைவருக்கு வருத்ததை ஏற்படுத்தி வருகிறது.

இதுஒருபுறம் என்றால், தே.மு.தி.க-வை தி.மு.க கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகள் நடக்கிறது. எங்களுக்கு வந்த தகவல்படி அந்த கட்சிக்கு ஆறு தொகுதிகள் வரை கொடுக்க தி.மு.க தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தே.மு.தி.கவின் இன்றை நிலை அனைவருக்கும் தெரியும்.

அந்த கட்சிக்கும் ஆறு தொகுதிகள், எங்களுக்கும் ஆறு தொகுதிகளே என்று சொன்னால் எப்படி. தே.மு.தி.க-வை விட நாங்கள் வலிமையாக இருக்கிறோம். அதனால் குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளாவது எங்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தலைவர் அடுத்தகட்ட முடிவை எடுப்பார் என்கிறார்கள்.

தி.மு.க தரப்பிலோ, தே.மு.தி.கவுடன் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதற்காக விடுதலை சிறுத்தைகளை நாங்கள் கழற்றிவிட போவதில்லை. கூடுதல் தொகுதிகள் எல்லோரும் கேட்டால் தி.மு.க மைனாரட்டி அரசைதான அமைக்க முடியும். அதைதான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்புகிறது.

குறைந்த பட்சம் 160 தொகுதிகளிலாவது தி.மு.க போட்டியிட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். அதற்கு தகுந்த மாதிரி கூட்டணி கணக்குகள் இருக்கும். வி.சி.க-வை சமாதானப்படுத்தவே ராமதாஸ் தரப்பை இப்போது கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது தலைமை என்கிறார்கள்.

ஏற்கனவே தலித் ஓட்டுகள் பெரிய அளவில் த.வெ.கவுக்கு செல்லும் என்று உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரவணைத்து செல்ல வேண்டிய நிலை தி.மு.கவுக்கு உள்ளது. எனவே திருமாவை திருப்தி படுத்தவேண்டிய நிலை தி.மு.க-வுக்கு உள்ளது.

இந்த தேர்தல், குறிப்பாக கூட்டணிகளை கையாள்வதில், உண்மையில், தி.மு.கவுக்கு பெரும் சிக்கலான தேர்தலாகவே இருக்கும் என்பது நிதர்சனம். அது உண்மைபோல இருக்கிறது. காரணம் சமீபத்தில் மதுரையில் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கட்சி தலைமை அமைதி காக்குமாறு கூறியும் அவர் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் அவரை யாரோ இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. அதோடு மாணிக்கம் தாகூர் இதை பற்றி தொடர்ந்து டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் தொகுதி கேட்பதால் திமுகவும் இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு பதிலடியாக திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடைக் கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

அப்போது தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது நியாயமாகப்படவில்லை. காரணம் என்னவென்றால் நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். எனது அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யாக சச்சிதானந்தம் இருக்கிறார். எனக்கும், என்னுடன் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-க்கும் கட்சிக் கட்டுப்பாடு உள்ளது.

நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன் னால் அதற்குப் பதில் சொல்லலாம். தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லாக் கட்சியும் நம்முடன் உள்ளன. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை. வந்தால் நிச்சயமாக முதலமைச்சர் அது குறித்து முடிவு செய்வார் என்றார்

தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

இச்சூழலில், தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை.

இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என பதிலளித்தார்.

செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, “கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை என கண்டித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்’ எனப் பேசியது சரியல்ல என்றனர்.

ஆக. தற்போது திமுக கூட்டணியில் உள்ள மூன்று முக்கியக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு, கூட்டணிக்குள் சிறு விரிசலை ஏற்படுத்துமோ என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *