
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த மூன்று நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரியமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கோட்டை பகுதியில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெய ஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன்கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம்பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து ,பின்பு இரவு அங்கிருந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர். அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ட்ரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அளவில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டி கரை பகுதி பொறியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.
வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று விடியற்காலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் துரத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது தனக்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் மூன்று வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

