தில்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து செய்தி கேட்டு தான் மிகுந்த மனவேதனை அடைகிறேன் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தில்லி சத்ய நிகேதன் பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சில மாணவர்கள் பலத்தக் காயமடைந்தனர். இதுகுறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், தில்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து செய்தி கேட்டு தான் மிகுந்த மனவேதனை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்குத் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தில்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்குத் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


