விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா – சீமான்!

Advertisements

சென்னை:

“மண்ணின் மக்களை அவர்களது நிலத்தை விட்டே தி.மு.க., அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்கத் தமிழக அரசு அறிவிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். மதுரை முல்லை நகர் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக மக்கள் வாழும் இடம் கண்மாய் இருந்த பகுதி என்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத் தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே?

குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? மாறாகத் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட 160 மனைகளை வழங்கியது எப்படி? ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, இன்றைய ஆட்சியாளர்கள் ஓட்டு கேட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? ஏன் அவைகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது?

காலங்காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து ஆக்கிரமிப்பென்று கூறி, அடித்துத் துரத்துவார்களென்றால் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பொழுதுபோக்குக் கூடங்கள் என எதுவொன்றிலாவது அரசுக் கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே தி.மு.க., அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர் தான் விடியல் அரசா?

அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணிக் கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியா? நெடுங்காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் எளிய மக்களின் வீடுகளை இடித்து, அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் செயல் துளியும் மனச்சான்றில்லாத கொடுங்கோன்மையாகும்.

தி.மு.க., அரசு நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்திருந்தால் வீடுகளை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. ஆகவே, மதுரை முல்லைநகர் மக்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களை வாழ்விடத்தை விட்டே வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று சீமான் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *