
மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கான நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை நகரமே மழை நீரால் சூழ்ந்து ஆங்காங்கே குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்பு மழை நின்றும் தேங்கியுள்ள மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது. மின் இணைப்பு, மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயலினால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதமானது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மூலமாக பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெள்ளச் சேதம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சரி செய்ய தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ. 561.29 கோடி வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய சார்பில் வெள்ள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


