புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலின் மேற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்று தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு-வட மெற்கு திசையில் நகர்ந்து, வரும் ஞாயிறு காலை புயலாக வலுப்பெறக் கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4-ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆந்திரா, தமிழகக் கடல் பகுதியில் நிலைகொள்ளும்.
அதன்பின்னர் 5 -ஆம் தேதி முற்பகலில் வடக்கு திசையில் மெல்ல நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புயலின் தாக்கம் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மறுதினம் திங்கட் கிழமை 4-ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
