புதுச்சேரி:
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைச் சமாளிக்க புதுச்சேரியில் மீட்பு பணிக்கு அரசுத் துறைகள் தயார் நிலையில் உள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது ஒரே நேரத்தில் மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவெடுதுள்ளது. புயல் காரணமாகப் புதுவை கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. 6 அடிக்கு மேல் அலைகள் எழும்பின. 4 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை நீடிக்கிறது. ஆழ்கடல் விசைப் படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவ கிராமங்களில் கடற்கரையில் நிறுத்தப்படும் படகுகள் கிரேன் மூலம் கரைக்கு ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் படகுகளை மீனவர்கள் மரங்களில் கட்டி வைத்துள்ளனர். கடலில் செல்லும் படகுகள் தற்போது ஊருக்குள் நிறுத்தப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாகப் பாதுகாப்பு கருதி, புதுவை கடற்கரை சாலை வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டுள்ளன.
புதுவையில் புயல் நிலவரம், கரையை கடக்கும் நேரம்குறித்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைவருக்கும் செல்போனில் ஒரே நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்ப பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசுத் துறைகள் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. புயல் காரணமாகப் பல்வேறு துறைகள் அடங்கிய பேரிடர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள 400 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் இரவு, பகலாகச் செய்து வருகின்றனர்.
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளது. காவல்துறை, பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மின்துறை அதிகாரிகள், பிற அரசுத் துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். புதுவை கடற்கரை சாலைக்கு நாளைக் காலை 10 மணிவரை பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை முழுவதும் முக்கிய சந்திப்புகளில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உணவுப் பொருட்கள் வாங்கிய மக்கள்: புயல் எச்சரிக்கை காரணமாகப் பல பகுதியில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். புயல் எச்சரிக்கை அறிவிப்புகளைப் புதுச்சேரி மக்கள் உற்று கவனித்து வருகின்றனர்.