
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து திருப்புவனம் காவல்துறையினர் விசாரித்தனர். கடந்த ஜூன் 27-ஆம் தேதி சென்ற மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் காரில் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் தப்பிக்க முயன்ற போது, கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், அவரை போலீசார் சுற்றிவளைத்து தாக்கிய இந்த வீடியோ வெளியாகி தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது.
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் என தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி உள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், இதுபோன்ற மீறல் சம்பவங்களை தான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
