
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதி வருகிறது. காலையில் நடை திறந்தது முதல் கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 7 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 2ம் படை வீடாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடலையொட்டிய இந்தக் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வார நாட்களைக் காட்டிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.
இன்று 2024ம் ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாகும். பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதலே கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இன்று அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டபோதே அதிகமான பக்தர்கள் கூடினர்.
இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் முருகனை தரிசிக்க பக்தர்கள் 7 மணிநேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் பக்தர்கள் பொறுமையாக வரிசையில் காத்திருந்து முருகனை வணங்கிச் சென்றனர்.
குறிப்பாக இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் ஏராளமான வந்திருந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலுக்குச் சென்று வந்தவர்களும் அதிகமாகத் திருச்செந்தூர் வந்திருந்தனர். இதனால் தான் இன்றயை தினம் வழக்கத்தைவிட அதிகமாகப் பக்தர்கள் காணப்பட்டனர்.
முன்னதாகப் பக்தர்கள் கடலில் குளித்தனர். இதனால் கடற்கரையிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதிகளவிலான கூட்டத்தால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.



