Crime: அண்ணியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தறுத்து கொலை!

Advertisements

சேலத்தில் சலூன் கடைக்காரர் மது அருந்தும்போது கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ளது பெரிய கொல்லப்பட்டி. இந்தப் பகுதியைச் சார்ந்தவர் கருணாநிதி (வயது 38) சலூன் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கோரிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கிய கருணாநிதி, அதே பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குச் சிலர் வந்து கருணாநிதியை கழுத்தில் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்யச் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் அழைத்து வரப்பட்டு மோப்பம் பிடிக்க விடப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடம் வந்து கை ரேகைகளைப் பதிவு செய்தனர்.சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் பிருந்தா நேரில் வந்து விசாரணை நடத்தினார்‌.இந்தக் கொலையில் துப்பு துலக்கத் தணிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி கடந்த செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்குத் தனது அண்ணன் மனைவி சாந்திதான் காரணம் எனக் கருதி சேலம் அன்னதானப்பட்டி பகுதிக்குச் சென்று சாந்தியை கொலை செய்துவிட்டு தலைமறைவானார் கருணாநிதி. பின்னர் கருணாநிதியை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சாந்தியை கொலை செய்ததால், கருணாநிதியை பழிக்குப் பலியாகக் கொலை செய்திருக்கலாம் என்கின்ற அடிப்படையில் காவல்துறையினர் கருணாநிதியின் உறவினர்கள் சிலரை தேடி வருகிறார்கள்.இந்தக் கொலை சம்பவம் கோரிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *