தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.Diwali
வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் இப்பொழுதில் இருந்தே பட்டாசு விற்பனை தீவிரமடைந்து வருகிறது. தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றின் தரம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளியன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை சார்பில் ஆலோசனைகளும் நடந்து வருகிறது.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

