குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.இதனால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டுக் கரை திரும்புவது வழக்கம்.
ஆழ்கடல் பகுதியில்தான் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழக கடல் பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் அதனையொட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி. மீ. வேகத்திலும், சில வேளைகளில் 65 கி. மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே மேற்கூறிய பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கரை திரும்பிய விசைப்படகுகள் பலத்த காற்று காரணமாக மீண்டும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே குளச்சல் பகுதியில் காலை முதல் மழை பெய்து வருவதால் குறைவான வள்ளம், கட்டுமரங்களே மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றன. இதனால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

