மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க விழாவில், பயனாளிகளான குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் தனது கைகளாலேயே தங்க மோதிரங்களை அணிவித்து மகிழ்ந்தார்.
முதலாவதாக மோதிரம் அணிவிக்கப்பட்ட குழந்தை, முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்த்து சிரித்தது. இதனை பார்த்த குழந்தையின் தாய் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
விழாவின் போது சில குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் பெயர் சூட்டினார். பின்னர் அந்த குழந்தைகளின் காதுகளில் புதிய பெயரை மூன்று முறை உச்சரித்து மகிழ்ந்தார். தொடர்ந்து, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட பயனாளிகளுடன் அமர்ந்து முதலமைச்சர் விஜய் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், சமீபத்தில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரங்களை அணிவித்தார். குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் நேரில் பேசிய அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தாய்மார்களின் உடல்நலம் குறித்தும் விசாரித்து, பிரசவத்துக்கு பிறகு உடல்நலத்தை முறையாக பேணுவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். மேலும், அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து திறந்தவெளி வேனில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைத்து பார்வையிட்டார்.
அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய கைத்தடி, கண் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும், போராட்டத்தில் பங்கேற்று காயமடைந்தபோது காந்தி அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த ஆடையையும் பார்வையிட்டு அதன் வரலாற்று பின்னணி குறித்து கேட்டறிந்தார். இந்த பொருட்களை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், மதுரை அழகர்கோவில் சாலை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு மதிய உணவு அருந்திய அவர், சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். ஓய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல உள்ளார்.

