தாராபுரத்தில் கொட்டித் தீர்க்கும் பனி : கடுங்குளிரால் மக்களின் வாழ்க்கை பாதிப்பு.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவிலும் அதிகாலையிலும் கடுங்குளிர் நிலவுகிறது.

இன்று அதிகாலை நிலவிய பனிமூட்டம் காலை ஏழரை மணி வரையிலும் நீடித்தது. இதனால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், வயல்வெளிகள் அனைத்தும் பனிப்படலத்தால் சூழப்பட்டன. சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மிகவும் மெதுவாகச் சென்றனர்.
வயல்வெளிகள் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் மேற்பரப்புகளில் பனித்துளிகள் படிந்து, உறைந்த நீர்த்துளிகளைப் போன்று காட்சியளித்தன. அதிகாலை நேரத்தில் நிலவிய இந்தக் கடும் குளிர், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் அன்றாடப் பணிகளுக்காக வெளியே சென்ற பொதுமக்களையும் பாதித்தது.
பனிப்பொழிவால் வீடுகளிலும் தோட்டங்களிலும் பயிரிட்டுள்ள மலர்ச்செடிகள் இலைகள் கருகிக் காணப்பட்டன. இதனால் பூக்கள் பூப்பது பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *