தேர்தலில் களம் காண்கிறாரா சூர்யா? – நற்பணி இயக்கம் அளித்த விளக்கம்!

Advertisements

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் ஆனவை தான். கடைசியாக வெளிவந்த ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றது. நடிகர் என்பதை தாண்டி ‘அகரம்’ அறக்கட்டளை கல்விப் பணி மூலமாக பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து அண்மையில் இதற்காக நடந்த விழா கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிட போகிறார் என்று தகவல் வெளியானது.  இந்த தகவலுக்கு சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம் அளித்திருக்கிறது.

இதுதொடர்பான அறிக்கையில், “கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணையங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *