சென்னை: பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில், ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மீறினால் குற்ற வழக்கு தொடரப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்தது.பாதுகாப்பு சாதனங்களை ஊழியர்கள் அணியவும், அடைப்புகளை நீக்க இயந்திரங்களை பயன்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், பாதாள சாக்கடைக்குள் இறங்கி பலர் பலியாவது தொடர் கதையாகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, ”கழிவுநீர் தொட்டி சுத்தப்படுத்தும் பணியில், ஊழியர்களை தனியாரும்ஈடுபடுத்துகின்றனர்,”என்றார்.குடிநீர்வழங்கல்மற்றும்கழிவுநீரகற்றுவாரியம்சார்பில், வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா ஆஜராகி, ”பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதை தடுக்கும்வகையில், விதிகள் வகுக்கப்பட்டுள்ளன; சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்றார்.
அரசு பிளீடர் முத்துக்குமார், ”பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில், ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.”இதை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக, துறை நடவடிக்கை உடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது. உயிரிழப்புக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அரசு வழங்குகிறது,” என்றார்.இதையடுத்து, விசாரணையை, அடுத்த மாதத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.