இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை:

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று சென்னை உள்பட வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர -வடதமிழக கடலோர பகுதியில் நிலவியது. அதன்பிறகு அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலைத் தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளிலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகேயும் நிலவியது.

இது இன்று வலுவிழக்கிறது.அதாவது மேற்கு – தென்மேற்கு திசையை நோக்கி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் வலுவிழக்க உள்ளது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று நேற்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய சென்னையில் வாய்ப்புள்ளது.

அதேபோல் நாளைத் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை தமிழக கடலோர பகுதிகளை எடுத்துக் கொண்டால் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *