
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது.
கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்ற இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
இப்போட்டியில் 82 ரன்கள் அடித்துச் சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் பவுமா சிறுதிநேரம் அதே இடத்தில நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளிச் சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்தச் செயலுக்குக் கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
பாகிஸ்தான் வீரர்களின் இந்தச் செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
