Bomb Threat: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

போரூர் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்க்கொண்டனர்.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இன்று இந்தப் பள்ளி அலுவலகத்திற்கு ஈமெயில் ஒன்று வந்தது. அதில் இந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது வெடிக்க போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வகுப்பறையில் இருந்த பள்ளி மாணவர்களைத் திறந்த வெளியில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் ஆவடியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்து வெடிகுண்டுகள் உள்ளதா எனப் பள்ளி வளாகத்தை முழுமையாகச் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், வாகனங்கள், காலியிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் தீவிரமாகச் சோதனை மேற்கொண்டனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு புரளியெனத் தெரியவந்தது இதனால் பள்ளி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. கடந்த மாதம் அண்ணா நகர், பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தையடுத்து தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *