
பீகார் மாநிலச் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் வெளியிட்டார். அப்போது பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் ஆறாம் நாளிலும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் நாளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 10ஆம் நாளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அக்டோபர் 13ஆம் நாளும் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அறிவித்தார்.
நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகப் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் நாள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இரண்டு தொகுதிகளுக்கும், இராஜஸ்தான், ஜார்க்கண்ட், தெலங்கானா, பஞ்சாப், மிசோரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நவம்பர் 11ஆம் நாளில் நடத்தப்படும் என்றும், அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.




