
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருடைய வீட்டுக்குச் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி அமர்ந்து இருந்ததன் மூலம் ஜனாதிபதியை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த ஆண்டு, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களில் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாகூர் ஆகிய நான்கு பேருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாரத ரத்னா விருதுகளை வழங்கினார். அவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் அத்வானி சார்பில் விருந்தைப் பெற்றுக் கொள்ள யாரும் வராததால் அவருடைய வீட்டுக்குச் சென்று விருதை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு அத்வானின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.
வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்க முடியாததால் அத்வானி நாற்காலியில் உட்கார்ந்தபடியே விருதை வாங்கினார்.
ஆனால் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படும் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியின்போது நாற்காலியிலிருந்து எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே கைத்தட்டி அத்வானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்குக் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர் ஜே டி) கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே இதுபற்றிக் கூறும்போது, “படத்தில் நின்று கொண்டிருக்கும் பெண்மணி இந்த நாட்டின் ‘முதல் குடிமகன்’ ஆன ஜனாதிபதி திரௌபதி முர்மு. படத்தில் அத்வானியை அடுத்து அமர்ந்து இருப்பவர் பிரதமர் மோடி. இது நாட்டின் பழங்குடி இன முதல்
ஜனாதிபதிக்கு அவமானம் மட்டுமின்றி நேர்த்தியான மரியாதைக்குரிய நடைமுறைக்கு எதிரானதும் ஆகும்… மிகுந்த அவமானம்..” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.ஆர் ஜே டி தலைவர் தேஜஸ்ஸ்ரீ யாதவ் இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து கூறும்போது “அத்வானிக்காக இல்லாவிட்டாலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலாவது பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நிற்க வேண்டாமா? ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
“ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னால் ஜனாதிபதி நடந்து செல்வதை பலமுறை பார்த்து இருக்கிறோம். அவர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லை. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கொள்கையை மட்டுமே அமல்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருந்த போதிலும் இணையதள பயனாளிகள் மட்டும் பாஜக ஆதரவாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து, “நாட்டின் மிக உயரிய விருதை வழங்கும்போது எந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமோ அதன்படி தான் இந்த நிகழ்வு நடைபெற்று இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளனர். அதன்படி விருதை வழங்கும்போது ஜனாதிபதி அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விருதைப் பெறுவோர் மட்டுமே நிற்பதற்கு அனுமதி உண்டு”என்று குறிப்பிட்டுள்ளனர்.


