சென்னை:
வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த தனியார் நிறுவனங்களின் ரூ.25.38 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து, வங்கிவசம் ஒப்படைத்துள்ளது. நஃபிசா ஓவர்சிஸ் மற்றும் சஃபாலெதர்ஸ் நிறுவனங்கள் போலியான சொத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தியன் வங்கியில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளன.
இதனால், இந்தியன் வங்கிக்கு ரூ.23.46 கோடி இழப்பு ஏற்பட்டது. இதில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
விசாரணையின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.20.65 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி, பறிமுதல் செய்தது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை இந்தியன் வங்கியிடம் அமலாக்கத் துறை தற்போது ஒப்படைத்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட சொத்தின் தற்போதையை மதிப்பு ரூ.25.38 கோடியெனக் கூறப்பட்டுள்ளது.