ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2978 மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்குக் கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காகச் சிறப்பு நிகழ்வாகத் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. வரத்து 320 கன அடி. திறப்பு 755 கன அடி. இருப்பு 2658 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 399.31 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடி. வரத்து 11.5 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 94.34 மி.கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 50.40 அடி. வரத்து இல்லாத நிலையில் பாசன தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 72.78 அடியாக உள்ளது. சோத்துப்பாறையில் 2.6, பெரியாறு அணையில் 1.4, தேக்கடி 3.8 மி.மீ. மழை அளவு பதிவானது.