சின்ன காளிபாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்ன காளிபாளையம் பகுதியில், ராமசாமி என்பவர் தனது மனைவி ஜானகி, மகள் சுகுணா ஆகியோருடன் வசித்து வந்தார்.
மகள் சுகுணாவிற்கு, பிரபு என்பவருடன் திருமணமான நிலையில், 10-வயதில் சிவானி, 4-வயதில் ஆதிரன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சுகுணாவிற்கும், அவரது கணவர் பிரபுவிற்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சின்ன காளிபாளையம் பகுதியில் ராமசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில், ராமசாமி, ஜானகி, சுகுணா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் துணியால் ஒருவரோடு ஒருவர் இணைத்துக் கட்டிக்கொண்ட நிலையில் கிணற்றில் மிதந்தனர். இதனை கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..


