
நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை, குமரி, மதுரையெனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளைய தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை தமிழகத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களில் சாமி குப்பிடுவதற்காகப் பொதுமக்கள் பூக்கள், வாழை மரம், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் சாதாரண நாட்களைக் காட்டிலும் தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.900, கனகாம்பரம் ரூ.700, பன்னீர் ரோஸ் ரூ.120, ஜாதி மல்லி ரூ. 500, சாக்லேட் ரோஸ் ரூ.240 என விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டில் மல்லி ரூ.1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.900, ஜாதி மல்லி ரூ.900, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.400 என விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் விலை இன்று மாலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

